புதுச்சேரியில் அமைச்சரவை பதவிகளை பகிர்வதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. உடன்பாடு பேச்சுவார்த்தையில் ரங்கசாமி சமரசம்


புதுச்சேரியில் அமைச்சரவை பதவிகளை பகிர்வதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. உடன்பாடு பேச்சுவார்த்தையில் ரங்கசாமி சமரசம்
x
தினத்தந்தி 3 Jun 2021 7:45 PM IST (Updated: 3 Jun 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் அமைச்சரவை பதவிகளை பகிர்வதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே உடன்பாடு ஏற்பட்டதால் 25 நாட்களாக நடந்த இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுவை சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடந்தது.
தேர்தலில் எந்த கட்சியும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் போட்டியிடவில்லை. இந்தநிலையில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை என்.ஆர். காங்கிரஸ் (10), பா.ஜ.க. (6) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து அப்போது பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைச்சரவை பதவி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளும் பேசிக் கொண்டதையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.

அன்றே தொற்று பாதிப்பு காரணமாக ரங்கசாமி ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அதன்பின் அவர் தனிமையில் இருந்தார். இதனால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப் போனது.

இதற்கிடையே பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. தொடர்ந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் சட்ட சபையில் என்.ஆர்.காங்கிரசை விட பா.ஜ.க.வின் பலம் 12 ஆக அதிகரித்தது. இதெல்லாம் ரங்கசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி புதிய எம்.எல்.ஏ.க் கள் பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் பதவிகள் குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட 3 அமைச்சர் பதவிகள், சபாநாயகர் பதவியை கேட்டு ரங்கசாமிக்கு பா.ஜ.க. நெருக்கடி கொடுத்தது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் என்பது இதுவரை இல்லாத ஒன்று என்பதாலும், முதல்-அமைச்சர் உள்பட 6 அமைச்சர்கள் கொண்ட சபையில் சரிசமமாக பா.ஜ.க.வுக்கு இடம் கொடுப்பதிலும் உடன்பாடு இல்லை என்பதால் ரங்கசாமி சமரசம் ஆகாமல் இருந்து வந்தார்.

ஆனாலும் இந்த கோரிக்கையில் பா.ஜ.க. விடாப்பிடியாக இருந்து வந்ததால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது. இதற்கிடையே கட்சி மேலிட அழைப்பின் பேரில் பா.ஜ.க. தலைவர்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லி சென்றனர்.

அங்கு தேசிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து விளக்கினர். என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே ஏற்பட்ட உரசல் விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்தநிலையில் அமைச்சரவை பதவி இடங்கள் பகிர்வது குறித்து ரங்கசாமியுடன் டெல்லி மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி இடங்களை பா.ஜ.க.வுக்கு விட்டுத்தர ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன்மூலம் சபாநாயகர் பதவியை விட்டு தந்ததன் மூலம் பா.ஜ.க.வுடன் ரங்கசாமி சமரசம் ஆகியுள்ளார். அதேநேரத்தில் துணை முதல்-அமைச்சர் பதவியை கேட்டதில் இருந்து பா.ஜ.க.வும் சமரசமாகியுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஓரிரு நாளில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி புதுச்சேரி வருகிறார். அப்போது அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படும் இலாகாக்கள், அமைச்சர்கள், சபாநாயகராக இடம்பெறுபவர்கள் யார், யார்? என்பது பற்றிய விவரம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

அடுத்த கட்டமாக சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அடுத்த வாரம் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா இருக்கும் என்றும் தெரிகிறது.

கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றது முதல் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக 25 நாட்களாக இருந்து வந்த பிரச்சினையில் தற்போது சுமுகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.

Next Story