கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விவகாரம்: 15 நாட்களுக்குள் அரசு தனது முடிவை தெரிவிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விவகாரம் குறித்து 15 நாட்களுக்குள் அரசு தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு சூதாட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சூதாட்டங்களால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்த சாரதா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்டு தலைமை ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, தலைமை நீதிபதி முன்னிலையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசையும், எதிர்தரப்பாக சேர்க்க வேண்டும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பங்கும் உள்ளது என்று வாதிட்டார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மாநில அரசுகளே புதிய சட்டத்தை கொண்டு வந்து தடை விதித்துள்ளது. அதுபோல், கர்நாடக அரசும் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ஏ.எஸ். ஓகா, ஆன்லைன் சூதாட்டத்திற்கு கர்நாடகத்தில் தடை விதிப்பது குறித்து அரசு இன்னும் 15 நாட்களுக்குள் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story