14 மளிகை பொருட்கள் தொகுப்பை பேக்கிங் செய்யும் பணி தீவிரம்
ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க 14 மளிகை பொருட்கள் தொகுப்பை பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 ரேஷன் கடைகள் மூலம் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களான 5 லட்சத்து 16 ஆயிரத்து 692 பேருக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்த பொருட்களை சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு அவை நேற்று லாரிகள் மூலமாக விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு வந்திறங்கியது.
பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு
இந்த பொருட்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், ஊழியர்கள் தனித்தனியாக பிரித்து அவற்றை ஒரே தொகுப்பாக வழங்க ஏதுவாக பேக்கிங் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி முடிந்ததும் 14 வகை பொருட்கள் அடங்கிய கொரோன சிறப்பு நிவாரண தொகுப்பு, நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மூலமாக வாகனங்களில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அவை ஓரிரு நாட்களில் அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு வந்திறங்கிய 14 வகை பொருட்களை கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story