இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் தாக்குதல்
இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் தாக்குதல் மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை.
சிக்கமகளூரு,
சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது நபர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டனர். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்மூலம் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக டாக்டர்கள் மைசூருவில் உள்ள அரசு காது, மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு தோல் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. கொரோனா நோயாளி களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கப்பட்டு வந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் என்றும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் வேறு எந்த வகையிலும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், அதனால் யாரும் பயப்பட தேவையில்லை என்றும் டாக்டர்கள் கூறினர். தற்போது அவர் மைசூருவில் உள்ள காது, மூக்கு பிரிவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story