மக்காச்சோளத்தில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை


மக்காச்சோளத்தில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 3 Jun 2021 10:15 PM IST (Updated: 3 Jun 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் பல்வேறு பிரச்சினைகளால் மக்காச்சோளத்தில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் பல்வேறு பிரச்சினைகளால் மக்காச்சோளத்தில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கோழித்தீவன உற்பத்தி
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதுதவிர இறவைப் பாசனம், பி.ஏ.பி. பாசனம், குளத்துப் பாசனம் போன்றவற்றிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் மக்காச்சோள சாகுபடியில் ஆண்டுதோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால் மகசூல் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆரம்ப கட்டங்களில் மக்காச் சோள சாகுபடி என்பது பெரிய அளவில் செலவு பிடிக்காத, நல்ல வருவாய் தரக்கூடிய சாகுபடியாக இருந்து வந்தது. மேலும் கோழித்தீவன உற்பத்தியில் மக்காச்சோளம் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
படைப் புழுக்கள்
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவில்  கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே ேதவை அதிகரித்து மக்காச் சோளத்துக்கும் நல்ல விலை கிடைத்து வந்தது.இதனால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.ஆனால் தற்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடும் வறட்சியால் பயிர்கள் கருகி மகசூல் இழப்பு ஏற்பட்டது. அடுத்த ஆண்டில் படைப் புழுக்களின் தாக்குதலால் பயிர்கள் வீணாகி ஒட்டு மொத்தமாய் மக்காச்சோளப் பயிர்கள் பாதிப்பைச் சந்தித்தது. அந்தவகையில் படைப் புழுக்களின் தாக்குதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
அரசும் படைப் புழுக்கள் ஒழிப்புக்கென பெரிய அளவில் நிதி ஒதுக்குவதில்லை.இதனால் மக்காச் சோளப் பயிர்கள் படைப் புழுக்களோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தற்போது விதைத்த 20 ம் நாள் தொடங்கி மருந்து தெளிக்க வேண்டியது உள்ளது.இந்த மருந்துகளெல்லாம் ஒட்டுமொத்த மக்காச் சோளப் பயிரையும் படைப்புழுக்கள் தின்று தீர்க்காமல் இருப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனாலும் பெருமளவு பயிரை படைப் புழுக்கள் சேதப்படுத்தி விடுகிறது.
மானிய விலையில் விதைகள்
இதுதவிர விளைந்த கதிர்களை மயில்கள், கிளிகள், அணில்கள் என்று பல உயிரினங்களும் தின்று தீர்க்கின்றன.அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே மக்காச் சோளத்துக்கு போதிய விலை கிடைக்காத நிலையே உள்ளது.இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடப்பு பருவத்தில் விளைந்துள்ள மக்காச் சோளக் கதிர்களில் பெருமளவு மணிகள் இல்லாமல் காலியாக இருக்கிறது.இத்தகைய பிரச்சினைகளால் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மகசூல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கதிர்களில் மணிகள் பிடிக்காமல் இருப்பதற்கு தரமற்ற விதைகள் காரணமாக இருக்கலாம் என்பது விவசாயிகளின் எண்ணமாக உள்ளது.எனவே வேளாண்மைத் துறையினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் அதிக பரப்பளவில் மக்காச் சோளம் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் மானிய விலையில் மக்காச்சோள விதைகள் வழங்குவதற்கு வேளாண்மைத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் தனியார் நிறுவனங்களில் அதிக விலை கொடுத்து மக்காச்சோள விதைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே மக்காச் சோள விதைகளை மானிய விலையில் வழங்க வேளாண்மைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

Next Story