அரிச்சந்திரபுரம் வெண்ணாறு குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி


அரிச்சந்திரபுரம் வெண்ணாறு குறுக்கே புதிய  பாலம் கட்டும் பணி
x
தினத்தந்தி 3 Jun 2021 11:11 PM IST (Updated: 3 Jun 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக அரிச்சந்திரபுரம் வெண்ணாறு குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது.

கூத்தாநல்லூர்:
“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக அரிச்சந்திரபுரம் வெண்ணாறு குறுக்கே புதிய  பாலம் கட்டும் பணி தொடங்கியது. 
நடைபாலம் 
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரத்தில், வெண்ணாற்றின் கரையோரம் அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு வெண்ணாற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன்பு குறுகலான சிமெண்டு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் சென்று வர வேண்டும். அதேபோல் பள்ளியை ஓட்டியுள்ள கால்நடை மருத்துவமனைக்கும் அப்பகுதி மக்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். 
மாணவர்கள் சிரமம்
இந்தநிலையில் குறுகலான நடைபாலம் நாளடைவில் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் பாலத்தின் தடுப்பு சுவர்கள் இடிந்தும், சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு காட்சி அளித்தது. இதனால்  பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
இதனால் பழுதடைந்த குறுகலான சிமெண்டு நடைபாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் வெண்ணாற்றின் குறுக்கே அகலமான சிமெண்டு பாலம் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து “தினத்தந்தி”யில் செய்தி வெளியிடப்பட்டது. . 
புதிய பாலம் கட்டும் பணி 
இதன் எதிரொலியாக அரிச்சந்திரபுரத்தில் குறுகலான பழுதடைந்த பாலம் அகற்றப்பட்டு, தற்போது மிகவும் அகலமான புதிய  பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட “தினத்தந்தி” நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story