திருச்சி-ராமேசுவரம் ரெயில்பாதையில் மின் மயமாக்கும் பணி மந்தம்


திருச்சி-ராமேசுவரம் ரெயில்பாதையில் மின் மயமாக்கும் பணி மந்தம்
x
தினத்தந்தி 3 Jun 2021 11:34 PM IST (Updated: 4 Jun 2021 4:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் திருச்சி-ராமேசுவரம் ரெயில்பாதையில் மின்மயமாக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.

காரைக்குடி
கொரோனா ஊரடங்கால் திருச்சி-ராமேசுவரம் ரெயில்பாதையில் மின்மயமாக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.
மின் மயமாக்கும் பணி
தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில்வே வழித்தடங்களையும் வருகிற 2027-ம் ஆண்டிற்குள் மின்மயமாக மாற்ற ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதையை மின் மயமாக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
திருச்சியில் இருந்து மானாமதுரை வரை 151 கிலோ மீட்டர் தொலைவிற்கு முதற்கட்டமாக ரூ.550 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த பணிகள் தற்போது காரைக்குடியை அடுத்த கானாடுகாத்தான் பகுதியில் இருந்து தொடங்கி செட்டிநாடு, கல்லல் வரை மின்கம்பம் ஊன்றும் பணி நடைபெற்று வருகிறது.
துணை மின்நிலையம்
 மேலும் இந்த மின் ரெயில் பாதைக்கு மின் வினியோகம் செய்வதற்காக காரைக்குடியில் 230 மெகாவாட் திறனுடைய துணை மின்நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த மின் கம்பங்கள் ஊன்றும் பணிக்கு போதிய பணியாளர்கள் வருவதில்ைல. இதனால் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.
 தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக குறைவான ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் வேளையில் விரைந்து இந்த பணியை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிடலாம் என ரெயில்வே அதிகாரிகள் எண்ணி இருந்தனர். ஆனால் கொரோனா அச்சத்தால் பணியாளர்கள் வேலைக்கு வராததால் மின்மயமாக்கும் பணியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பணிகளில் தொய்வு
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திருச்சி-ராமேசுவரம் மின்மயமாக்கல் பணிகளை விரைந்து முடித்து வருகிற 2022-ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த பணிகள் பயன்பாட்டிற்கு வந்தால் தற்போது 80முதல் 100கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில்கள் மின் மயமாக்கப்பட்ட பின்னர் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டால் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு சுமார் 1 மணி நேரத்தில் சென்றடையலாம். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பணிகள் தொய்வு ஏற்பட்டாலும் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story