விளைநிலங்களில் புகுந்து யானை மீண்டும் அட்டகாசம்
பூதப்பாண்டி அருகே உள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே உள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
பூதப்பாண்டி அருகே உடையார்கோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தது. பின்னர் அங்குள்ள விளை நிலங்களில் இருந்த தென்னை, வாழை உள்ளிட்டவற்றை நாசம் செய்தன. பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து யானைகளை விரட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
மேலும், யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க உடையார்குளம் பகுதியில் பெரிய அளவிலான அகழிகள் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டன.
தொடர்கிறது
இந்த நிலையில் ஆனைக்கல் பகுதியில் நேற்று காலை தனியாக வந்த ஒரு காட்டு யானை செல்வன் என்பவரது தென்னந்தோப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. பின்னர் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் யானையை விரட்ட சத்தமிட்டனர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட யானை அங்குமிங்கும் சுற்றியது. பின்னர் சிறிது நேரம் கழித்து காட்டுக்குள் சென்றது.
காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் இருக்க உடையார் குளம் பகுதியில் அகழி தோண்டப்பட்டு இருந்த நிலையில், வேறு வழியாக மீண்டும் இந்த பகுதிக்கு யானை வந்துள்ளதாக தெரிகிறது.தற்போது மீண்டும் காட்டு யாைன வரத்தொடங்கியதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், யானை ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story