நொய்யல் அருகே கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்


நொய்யல் அருகே கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 3 Jun 2021 11:55 PM IST (Updated: 3 Jun 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் அருகே கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் குவிந்தனர்.

நொய்யல்
தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3-ந்தேதி காலை 9 மணி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதில் 200 பொதுமக்களுக்கும், 50 முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் மற்ற யாரும் வரவேண்டாம் என கூறப்பட்டிருந்தது. 
இந்நிலையில் நேற்று அதிகாலை முதலே நொய்யல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நீண்ட வரிசையில் நின்றனர். காலை 7 மணியளவில் சுமார் 700 பேருக்கு மேல் குவிந்தனர். 
வாக்குவாதம்
இந்நிலையில் வரிசையில் நிற்கும் 44 வயதுக்கு மேல் உள்ள 200 பேருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் மற்றவர்கள் கலைந்து செல்லுமாறும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர் அனிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தனர். 
இதனிடையே முன் களப்பணியாளர்கள் சிலருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதற்கு வரிசையில் நின்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு சுகாதார பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
தடுப்பூசி பணி நிறுத்தம்
பின்னர் பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு   சமூக இடைவெளியின்றி வரிசையாக நிற்காமல் கும்பலாக ஊசி போடும் இடத்தை முற்றுகையிட்டனர். இதனால் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி மீண்டும் வரிசையாக நிற்க வைத்தனர். அதை அடுத்து 2 மணிநேரம் கழித்து மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 
ஏமாற்றம்
இதில் முண்டியடித்து கொண்டு முன்னாள் சென்றவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட்டதால் நீண்ட நேரம் காத்திருந்த பலர் தடுப்பூசி போடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்ததால் இப்பகுதியில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story