பேரிடர் கால மீட்பு பணிக்கு 15 குழுக்கள்


பேரிடர் கால மீட்பு பணிக்கு 15 குழுக்கள்
x
தினத்தந்தி 3 Jun 2021 11:57 PM IST (Updated: 3 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடர் கால மீட்பு பணிக்கு 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடர் கால மீட்பு பணிக்கு 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், தென்மேற்கு பருவமழை காலத்தையொட்டி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தென்மேற்கு பருவமழை காலத்தையொட்டி மாவட்ட அளவில் கனமழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதுவாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ​தமிழக அரசு, அறிவுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு இருக்கும். இருப்பினும் கடந்த ஜனவரியில் சராசரியாக 48.50 மி.மீ. பெய்ய வேண்டிய மழை 248.74 மி.மீ. அளவு கனமழையாக பதிவானது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்தையும் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும்.
15 குழுக்கள்
மாவட்டத்தில் பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல அளவில் துணை கலெக்டர் நிலை அலுவலர்கள் தலைமையில் 15 குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தின்போது எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மண்டல குழு அலுவலர்கள் தங்களது பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் தாழ்வான பகுதிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதனை இப்பட்டியலில் சேர்க்க வேண்டும். எளிதில் பாதிக்கக் கூடிய பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்க 32 நிவாரண மையங்கள் உள்ளன. மண்டல அலுவலர்கள்  நிவாரண மையங்களை நேரில் ஆய்வு செய்து அந்த மையங்களின் நிலை குறித்து உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளிகள், திருமண மண்டபங்கள் போன்ற கட்டிடங்களை கூடுதல் நிவாரண மையங்களாக  தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சாலை போக்குவரத்து பாதிக்கப்படும்பட்சத்தில் அதனை உடனடியாக சீர்செய்யவும்,. கண்மாய், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் அளவினை கண்காணித்திடவும், நீர்வழித்தடங்களில் தடையில்லாமல் பராமரித்திடவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் கரை உடைப்பு ஏற்பட்டால் அவற்றை சரிசெய்ய ஏதுவாக போதிய அளவு மணல் மூடைகள் இருப்பு வைக்க வேண்டும். கடலோர பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான அறிவிப்புகளை முறையே அறிவித்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story