நள்ளிரவில் தவித்த தம்பதியை கார் மூலம் ஊருக்கு அனுப்பிய போலீஸ் இன்ஸ்பெக்டர்


நள்ளிரவில் தவித்த தம்பதியை கார் மூலம் ஊருக்கு அனுப்பிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 3 Jun 2021 11:58 PM IST (Updated: 3 Jun 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் தவித்த தம்பதியை கார் மூலம் ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார்.

குளித்தலை
கோவையிலிருந்து கணேஷ் என்பவர் தனது மனைவி சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். குளித்தலை அருகே உள்ள குறப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பஞ்சராகி உள்ளது. இதனால் அவர்கள் செய்வதறியாது சாலையோரம் தவித்து நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு மற்றும் போலீசார் சாலையோரம் நின்று கொண்டிருந்த கணேஷிடம் விசாரித்தனர். அப்போது திருச்சி மலைக்கோட்டை பகுதியில் வசித்து வந்த சுமதியின் தந்தை இறந்து விட்ட காரணத்தால் அவரின் இறுதிச் சடங்கிற்கு அனைவரும் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குளித்தலை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரை வரவழைத்து அவரது காரில் கணேஷ் குடும்பத்தினரை திருச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு அனுப்பி வைத்தார். ஊரடங்கு காலத்தில் நள்ளிரவில் தவித்துக்கொண்டிருந்த தம்பதியினரை உரிய இடத்திற்கு அனுப்பிவைத்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story