திருச்சி கலையரங்கம் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றம்


திருச்சி கலையரங்கம் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 4 Jun 2021 12:07 AM IST (Updated: 4 Jun 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலையரங்கம் வளாகத்தில் தடுப்பூசி போடுவதற்காக ஏராளமானவர்கள் வந்து குவிந்ததால் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் ஏமாற்றமடைந்தனர்.


திருச்சி,
திருச்சி கலையரங்கம் வளாகத்தில் தடுப்பூசி போடுவதற்காக ஏராளமானவர்கள் வந்து குவிந்ததால் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா நோயிலிருந்து தப்பிக்க ஒரே வழி அதற்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. டாக்டர்களும் இதனையே வலியுறுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது.

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி வந்தது எல்லாம் தீர்ந்து விட்டதால் திருச்சியில் கடந்த சனிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் தொடங்கியது

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் கலையரங்கம் புதிய திருமண மண்டபம், பொன்மலை, ஸ்ரீரங்கம், கோ அபிஷேகபுரம், அரியமங்கலம் கோட்ட அலுவலகங்களில் நேற்று காலை தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.இதனை அறிந்த பொதுமக்கள் இந்த 5 இடங்களிலும் வந்து குவிந்தனர்.

கலையரங்கம் வளாகத்தில் ஏராளமானவர்கள் வந்து குவிந்ததால் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். ஊசி போடும் இடத்திற்கு பத்து, பத்து நபர்களாக பிரித்து அனுப்பப்பட்டனர். முதலில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

போலீசாருடன் வாக்குவாதம்

ஆனால் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றதால் 18 முதல் 44 வயதினருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும். மற்றவர்கள் திரும்பிப் போய்விடலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் ஏராளமானவர்கள் வந்து குவிந்து விட்டனர். இதன்காரணமாக கலையரங்கம் வளாகத்தின் பிரதான கேட் இழுத்து மூடப்பட்டது.

அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஏற்கனவே ஏராளமானவர்கள் உள்ளே இருப்பதால் அவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்க முடியும் மற்றவர்கள் உள்ளே வரக்கூடாது என கூறினார்கள். அவர்களுடன் தடுப்பூசி போட வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏமாற்றம்

இந்நிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பேசினார். இன்று (அதாவது நேற்று) 500 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே உள்ளே வந்து விட்டார்கள்.

அதனால் மற்றவர்கள் திரும்பிச் செல்லுங்கள் நாளை (இன்று) காலையிலேயே வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார். 
இதனை தொடர்ந்து வெளியில் நின்றவர்கள் ஏமாற்றத்துடன் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றனர். இதேபோல கோ அபிஷேகபுரம், பொன்மலை கோட்ட அலுவலகங்களிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

உப்பிலியபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்ற முகாமில் நீண்ட வரிசையில் நின்ற பொது மக்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு, பத்து, பத்து பேராக அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பச்சைமலையில் டாக்டர் சம்பத் தலைமையில் நடைபெற்ற முகாமில், புத்தூர் கிராமத்தில் வீடு, வீடாக சென்று தன்னார்வலர்களால் மலைவாழ் மக்கள் அழைத்து வரப்பட்டு 48 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story