பிளஸ்-2 தேர்வு தொடர்பாக கல்வியாளர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


பிளஸ்-2 தேர்வு தொடர்பாக கல்வியாளர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2021 12:08 AM IST (Updated: 4 Jun 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வு தொடர்பாக கல்வியாளர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி, 
பிளஸ்-2 தேர்வு தொடர்பாக கல்வியாளர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பிளஸ்-2 தேர்வு

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக கல்வியாளர்கள், பெற்றோர் நலச்சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மருத்துவ நிபுணர் குழு, தோழமைக் கட்சியினர் உள்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை கேட்டு, 2 நாட்களில் அறிக்கை அளிக்குமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், இ-மெயில் முகவரி அளித்து, தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் கருத்து கூறுமாறு கேட்டுள்ளோம். 
மேலும், மாவட்டந்தோறும் பெற்றோரிடம் கருத்து கேட்டு அறிக்கை அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று ஆலோசனை

அனைத்துத் தரப்பினரும் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஆகியோருடன் நாளை (அதாவது இன்று) மாலை 4 மணியளவிலும், அதன்பிறகு கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் ஆகியோருடன் மாலை 5 மணியளவிலும் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
மே 5-ந்தேதி (நாளை) காலை, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அவர் இறுதி முடிவை அறிவிப்பார்.

வைகோ கருத்து

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டும் எனக் கூறி இருக்கிறார். மதுரை வெங்கடேசன் எம்.பி. பிளஸ்-2 தேர்வை ரத்து செய்யத்தெரிந்த பிரதமருக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாதது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ளதுடன், கல்லூரிகளில் சேரும் அனைவருக்கும் கொரோனா காலத்தை பயன்படுத்தி தேசிய நுழைவுத்தேர்வை கொண்டு வரும் முயற்சியாக இது உள்ளதாக சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார். 

பிளஸ்-2 தேர்வு விவகாரத்தில் அனைத்து தோழமை கட்சி தலைவர்களின் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார்.

மதிப்பீடு செய்வது எப்படி?

ஏற்கெனவே 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் அளிப்பது என்று குழு அமைத்து கருத்து கேட்டு வருகிறோம். இந்தநிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கும் சரியாக மதிப்பீடு செய்து மதிப்பெண் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

ஆனால், எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், கல்வி அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் பெரும்பாலானோர் பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டும் என்றுதான் கருத்து தெரிவித்திருந்தனர். 

தகுதி தேர்வு

முதல்-அமைச்சர் அறிவுறுத்தியபடி மாணவர்களின் எதிர்காலம் எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல் அவர்களது உடல் நலனும் முக்கியம். எனவே, அதைக்கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும். 2013, 2017, 2018 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பலரும் பணிக்கு காத்திருக்கின்றனர். பள்ளிக்கூடம் திறக்கப்படும் நேரத்தில் இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நல்ல முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story