நெடுஞ்சாலை திட்டப் பணிகளின் தரம் குறித்து மறு ஆய்வு


நெடுஞ்சாலை திட்டப் பணிகளின் தரம் குறித்து மறு ஆய்வு
x
தினத்தந்தி 4 Jun 2021 12:19 AM IST (Updated: 4 Jun 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஒட்டுமொத்த ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலை திட்டப்பணிகளின் தரத்தை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விருதுநகர்,ஜூன்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஒட்டுமொத்த ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலை திட்டப்பணிகளின் தரத்தை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒட்டு மொத்த ஒப்பந்தம்
கடந்த ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் திட்டப்பணிகள் ஒட்டு மொத்த ஒப்பந்த (பேக்கேஜ்) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அப்போதே எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தமிழக அரசு இந்த நடைமுறையை அமல்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த ஒப்பந்த அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை திட்ட பணிகளை மேற்கொள்ள அருப்புக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 600 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலை திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ.630 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டு தொடங்கி 2023-ம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 
பணப்பட்டுவாடா
இம்மாவட்டத்தில் தற்போது 3 ஆண்டுகள் குறிப்பிட்ட அந்த தனியார் நிறுவனம் ஒட்டுமொத்த ஒப்பந்த அடிப்படையில் திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. இத்திட்டப்பணிகளை நெல்லையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோட்ட நெடுஞ்சாலை தரக் கட்டுப்பாட்டு என்ஜினீயர் ஆனையப்பன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விருதுநகரில் உதவி தரக்கட்டுப்பாட்டு என்ஜீனியர் கணேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். அரசு விதிமுறைப்படி தரக்கட்டுப்பாட்டு பிரிவில் சான்றிதழ் பெற்று பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
 மறுஆய்வு 
ஆனாலும் தமிழக அரசு விருதுநகர் உள்ளிட்ட பல நெடுஞ்சாலை கோட்டங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த ஒப்பந்த அடிப்படையிலான திட்டப்பணிகளின் தரம் குறித்து மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் கோட்டத்தில் திருப்பூர் நெடுஞ்சாலை கோட்ட தரக்கட்டுப்பாட்டு என்ஜினீயர் செல்வகுமார் தலைமையிலான அதிகாரிகள் விருதுநகரில் முகாமிட்டு இங்கு ஒட்டுமொத்த ஒப்பந்த அடிப்படையில் முடிக்கப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக செய்து முடிக்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் பின்னர் கள ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
சாலைகள் விதிமுறைகளின்படி தரமாக போடப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது. இதில் ஏதேனும் மாறுபாடு இருந்தால் அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Next Story