சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது
சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓகளூர் கிராமம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் அருள்பிரபு(வயது 27). இவர் வேப்பூரில் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும், இவருடன் பணியாற்றுகிற கணேசன் மற்றும் கூலியாட்கள் வெற்றிவேல், ஆனந்தராஜ், பிரவீன் ஆகியோர் கடந்த 27-ந் தேதி குன்னம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் வரகு தானியம் கொள்முதல் செய்தனர். பின்னர் மதியம் கீழப்பெரம்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு மதிய உணவு சாப்பிட்டனர்.
அப்போது பள்ளியின் உள்பகுதியில் இருந்து வந்த கீழப்பெரம்பலூரை சேர்ந்த முத்துக்குமார், தொட்டி ஆகிய இருவரும் அருள்பிரபுவின் இருசக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு தலைவரின் படத்தை பார்த்துவிட்டு தகாத வார்த்தைகளாலும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், சாப்பாடு பொட்டலங்களை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருள்பிரபு, கணேசன் மற்றும் கூலி ஆட்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அனைவரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அருள்பிரபு, குன்னம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர், பெண்ணாடம் பஸ் நிலையத்தில் முத்துக்குமார், தொட்டி ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story