பட்டுக்கோட்டையில், வேலை கேட்டு வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி 9-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் பணி நியமன ஆணையை நகராட்சி ஆணையர் வழங்கினார்
பட்டுக்கோட்டையில், வேலை கேட்டு வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி 9-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு நகராட்சி ஆணையர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
பட்டுக்கோட்டை:-
பட்டுக்கோட்டையில், வேலை கேட்டு வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி 9-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு நகராட்சி ஆணையர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
தற்கொலை மிரட்டல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகர் பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் மணிகண்டன்(வயது 35). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராக வேலை பார்த்து வந்த இவர், திடீரென பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மீண்டும் தனக்கு வேலை வழங்க வேண்டும் என அவர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். கோரிக்கையை வலியுறுத்தி பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுப்பதை அவர் வாடிக்கையாக செய்து வந்தார்.
வயர்லெஸ் கோபுரத்தில்
இந்த நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் மணிகண்டன் திடீரென பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி நகராட்சியில் தனக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதை அறிந்த பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர், நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் எனக்கு மீண்டும் நகராட்சியில் வேலை வழங்க வேண்டும். இழப்பீடாக ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறி கீழே இறங்கி வராமல் முரண்டு பிடித்தார். அப்போது நகராட்சி ஆணையர், கீழே இறங்கி வந்தால் வேலை தருவதாக உறுதி அளித்தார்.
பணி நியமன ஆணை
இதையடுத்து 12.30 மணிக்கு கீழே இறங்கி வந்த அவரிடம் நகராட்சி ஆணையர் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணி நியமனம் செய்த ஆணையை வழங்கினார்.
மணிகண்டன் கடந்த 5 ஆண்டுகளாக வேலை கேட்டு 9-வது முறையாக வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story