நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த 2 நாட்களாக தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்திற்கு 7 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. மேலும் ஏற்கனவே தடுப்பூசி போட்ட நபர்களுக்கும் 2-வது தடுப்பூசி போடப்பட்டது. இதுதவிர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் ஏராளமான ஊழியர்கள் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நல மையங்களில் நேற்று 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து மருத்துவ துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் கோவிஷீல்டு 6 ஆயிரம், கோவேக்சின் 1,000 என மொத்தம் 7 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்து. இந்த 7 ஆயிரம் தடுப்பூசிகளும் மாவட்டம் முழுவதுமுள்ள தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு முதலில் வரும் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story