சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 33 பேர் பலி மேலும் 1,253 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 33 பேர் பலி மேலும் 1,253 பேருக்கு தொற்று உறுதி
x

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 33 பேர் பலியாகினர். மேலும் 1,253 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 33 பேர் பலியாகினர். மேலும் 1,253 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பு அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 1,290 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 1,253 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 355 பேர், சங்ககிரியில் 89 பேர், ஓமலூரில் 83 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 80 பேர், வீரபாண்டியில் 57 பேர், ஆத்தூரில் 54 பேர், எடப்பாடியில் 48 பேர், சேலம் ஒன்றியத்தில் 46 பேர், அயோத்தியாப்பட்டணம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 40 பேர், நங்கவள்ளியில் 39 பேர், கொளத்தூரில் 37 பேர், வாழப்பாடியில் 35 பேர், காடையாம்பட்டியில் 33 பேர், கெங்கவல்லியில் 32 பேர், தாரமங்கலம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 31 பேர், கொங்கணாபுரத்தில் 28 பேர், தலைவாசலில் 27 பேர், பனமரத்துப்பட்டியில் 26 பேர், மகுடஞ்சாவடியில் 18 பேர், ஏற்காட்டில் 14 பேர், நரசிங்கபுரத்தில் 10 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
9,798 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது. 
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 687 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 9 ஆயிரத்து 798 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 125-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
33 பேர் பலி
சேலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,044 ஆக அதிகரித்துள்ளது.

Next Story