கர்நாடகாவில் இருந்து கோவைக்கு மதுகடத்தி வந்த லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து கோவைக்கு மதுகடத்தி வந்த லாரி டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம்-காரமடை ரோடு பாரதி நகரில் உள்ள ஒர்க் ஷாப்பில் கர்நாடகாவில் இருந்து பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்திருப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, இளவேந்தன், வெங்கடேசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் 320 மதுபாட்டில்கள் மற்றும் 48 மது பாக்கெட்டுகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார், லாரி டிரைவர் காரமடை காந்திநகரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக லாரி டிரைவர் ராஜேந்திரன், லாரி கிளீனர் மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரை சேர்ந்த முனியப்பன் என்ற பாபு (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கடத்தி வந்த மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story