நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவல் கண்டறியப்பட்ட 101 இடங்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு


நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவல் கண்டறியப்பட்ட 101 இடங்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2021 5:33 AM IST (Updated: 4 Jun 2021 5:59 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவல் கண்டறியப்பட்ட 101 இடங்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 600-ஐ நெருங்கி உள்ளது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அறிகுறி தென்படும் நபர்கள் தாமதமாக கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வருவதால் இறப்பு நேரிடுகிறது. 

பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்து உள்ளது. தொற்று பரவல்  கண்டறியப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலில் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு வீட்டை சுற்றி இருபுறங்களிலும் தலா 5 அல்லது 10 வீடுகள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படும் இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு பகுதியில் தொற்று அறிகுறி தென்பட்டால் அப்பகுதி முழுமையாக தனிமைப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் அதிகம் பேருக்கு தொற்று பாதித்த இடங்கள் கிளஸ்டராக (தொற்று பரவும் பகுதி) அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஊட்டி நகராட்சியில் அன்பு அண்ணா காலனி, கூடலூர், பந்தலூர், மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் என மாவட்டம் முழுவதும் 101 இடங்கள் கிளஸ்டராக இருக்கிறது. அப்பகுதிகளில் சிறப்பு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. 

இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் தமிழக அரசு தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Next Story