மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
மீஞ்சூர் ரெயில்வே கேட் அருகில் மாம்பழங்கள் ஏற்றி வந்த லாரியில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை போலீசால் கைது செய்தனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு போன்ற இடங்களில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பொன்னேரி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி மற்றும் போலீசார் மீஞ்சூர் காட்டூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாம்பழங்கள் ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டனர். அந்த லாரியில் மாம்பழங்களின் கீழ் 20 அட்டை பெட்டிகளில் 960 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாட்டில்களில் ஆந்திர மாநில லேபிள்கள் காணப்பட்டது.
மது பாட்டில்களை கடத்தி வந்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த முருகன் (வயது 34), ஐசக் (30), நாகராஜ் (38) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து சென்னையில் அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த 3 பேரையும் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story