கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 3,357 மதுபாட்டில்கள் பறிமுதல்


கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 3,357 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Jun 2021 9:40 AM IST (Updated: 4 Jun 2021 9:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 3,357 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், நடுவாங்கரை பகுதியில் நேற்று அதிகாலை கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்களை சிலர் காரில் ஏற்றி கொண்டு இருப்பதாக அரும்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். கன்டெய்னர் லாரி டிரைவரான நேபாளத்தைச் சேர்ந்த சோனு (வயது 35) என்பவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கைதான டிரைவர் சோனுவிடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து, சென்னையில் உள்ள மற்ற இடங்களுக்கு வினியோகம் செய்ய கார்களில் ஏற்றியது தெரிந்தது. மதுபாட்டில்கள் கடத்தி வந்த கன்டெய்னர் லாரி, 3 கார்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3,357 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கார்களில் ஒட்டப்பட்டு இருந்த நீதிபதி, ஊடகம் என்ற ஸ்டிக்கர்கள் மற்றும் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story