சாலையில் தேவை இன்றி சுற்றி திரிந்தோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - போலீசார் நூதன நடவடிக்கை
சாலையில் தேவை இன்றி சுற்றி திரிந்தோருக்கு போலீசார் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து நூதன முறையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை,
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிவோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் சென்னை பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பாலம் கீழே உள்ள சாலையில் தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிவோர் மீது போலீசார் நூதன நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர். அதாவது உரிய ஆவணங்களின்றி, அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுவோரை பிடித்து, அவர்களுக்கு கட்டாய கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் நேற்று காலை ஒரு தம்பதி மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, தேவையின்றி சுற்றி திரிவது தெரியவந்தது. இதையடுத்து அந்த தம்பதிக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களுக்கு முக கவசம் சரியாக அணியவேண்டும், தேவையின்றி சுற்றி திரியக்கூடாது என்பன போன்ற அறிவுரைகளையும் போலீசார் வழங்கினர்.
இவ்வாறு நேற்று ஒரே நாளில் 48 பேர் சிக்கிக்கொண்டு கட்டாய கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அந்த சாலையில் சுற்றி திரியவே வாகன ஓட்டிகள் பீதியடைகிறார்கள்.
போலீசார் இதுபோல நடவடிக்கைகளை அனைத்து பகுதிகளிலும் நடத்தி நெருக்கடி கொடுத்தால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவது தவிர்க்கப்படும். எதிர்பார்த்த வெற்றியை ஊரடங்கு பெற்றுத்தரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story