பாகூர் அருகே பரபரப்பு சம்பவம்: சொகுசு காரில் சாராயம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்
பாகூர் அருகே சொகுசு காரில் சாராயம் கடத்தியவரை சினிமா பாணியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
பாகூர்,
புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கட்ட ஊரடங்கால் மது, கள், சாராயக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது, கள்ளச்சாராயம் விற்பனை தலைத்தூக்கி உள்ளன. இதனை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று பாகூர் அம்பேத்கர் சிலை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சவுரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஜீப்பில் பின்தொடர்ந்து காரை விரட்டினர். சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு சினிமா பாணியில் காரை முன்னும், பின்னும் துரத்தினர்.
அப்போது கார் திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி வயல்வெளியில் பாய்ந்தது. உடனே சுதாரித்து கொண்ட டிரைவர் காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றார். இருப்பினும் அவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
பின்னர் காரில் சோதனை செய்தபோது, 6 கேன்களில் 300 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது.. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதையடுத்து அவரை, காருடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கொமந்தான்மேடு வீரன்கோவில் தெருவை சேர்ந்த வீரமணி (வயது 30) என்பதும், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு சாராயத்தை கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் 300 லிட்டர் சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர்.
சாராயம் கடத்திய வாலிபரை பிடித்த போலீசாரை, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், பாகூர் சரக இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் பாராட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் மணமேடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வைத்து சாராயம் விற்ற அழகியநத்தத்தை சேர்ந்த கலைமணி (33) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 180 மி.லி. கொண்ட 35 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் கலால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story