கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: கரையோர கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை


கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: கரையோர கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2021 10:30 PM IST (Updated: 4 Jun 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: கரையோர கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடியாத்தம் தாலுகா மோர்தானா கிராமத்தில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வேலூர் மாவட்டத்தில் கனமழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து, மோர்தானா அணையில் இருந்து உபரி நீர் வெளியேறினால் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித் துறையினரும், வருவாய்த் துறையினரும் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

இதனால் கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மோர்தானா, கொட்டாரமடுவு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்காலப்பள்ளி, உப்பரப்பள்ளி, தட்டப்பாறை, ஆண்டகான்பட்டி, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும்பாடி, மீனூர், மூங்கப்பட்டு, சீவூர், குடியாத்தம் நகரம், இந்திரா நகர், ஒலக்காசி, சித்தாத்தூர் மற்றும் ஐதர்புரம் கிராமங்களில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

 கனமழை நேரத்தில் கவுண்டன்ய ஆற்றில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றில் குளிப்பது மற்றும் துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மேற்படி கவுண்டன்ய ஆற்றில் சிறுவர்களை குளிக்கவோ அல்லது விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story