தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்ற விவசாயிகள்


தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்ற விவசாயிகள்
x
தினத்தந்தி 4 Jun 2021 11:02 PM IST (Updated: 4 Jun 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து மானாவாரி நிலத்தை உழவு செய்து தயார் நிலையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து மானாவாரி நிலத்தை உழவு செய்து தயார் நிலையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வானம் பார்த்த பூமி
நாட்டின் வேளாண்மை பொருளாதாரத்துக்கு இன்றியமையாததாக பருவமழை உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 2 விதமான பருவமழைகளால் பலனடைகிறது. அந்தவகையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைகாலமாகவும், ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக் காலமாகவும் கணக்கிடப்படுகிறது. இந்த பருவமழைக் காலங்களில் போதிய பாசன வசதி இல்லாமல் வான் மழையை மட்டுமே நம்பி பயிரிடக் கூடிய மானாவாரி சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
சிறுதானியப் பயிர்கள், பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துப்பயிர்கள் போன்றவையே மானாவாரியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நமது நாட்டின் மொத்த சாகுபடிப் பரப்பளவில் சுமார் 70 சதவீதம் மானாவாரி சாகுபடியின் கீழ் உள்ளது. தமிழகத்தைப்பொறுத்தவரை சுமார் 50 சதவீத நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. நமது நாட்டின் மொத்த உணவு உற்பத்தியில் 42 சதவீதம் மானாவாரி சாகுபடி மூலமே கிடைக்கிறது. தானிய வகை மற்றும் பயறு வகைப் பயிர்களில் 90 சதவீதமும் எண்ணெய் வித்துப் பயிர்களில் 75 சதவீதமும் மானாவாரிப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க பருவமழையை நம்பியே பயிர் சாகுபடி மேற்கொள்ள வேண்டியதிருப்பதால் விவசாயிகளுக்கு இது ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது.
மழைநீர் சேமிப்பு
ஆனாலும் பெரும்பாலும் மானாவாரிப் பயிர்களுக்கான பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு என்பதால் விவசாயிகள் மானாவாரி சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் உடுமலை பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை உழவு செய்து மழையை வரவேற்கத் தயாராக உள்ளனர்.இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-
மானாவாரி சாகுபடி என்பது கவனிப்பாரற்ற சவலைக் குழந்தையாகவே பெரும்பாலும் உள்ளது. இதனால் மானாவாரி பயிர்களின் உற்பத்தித்திறன் மிகவும் குறைவாகவே உள்ளது.நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் கூடுதல் கவனம் செலுத்தினால் மானாவாரியில் நல்ல மகசூல் பெற முடியும்.மானாவாரியில் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது பாசன நீராகும்.
எதிர்பார்த்த மழை பெய்யாவிட்டால் வறட்சி ஏற்பட்டு பயிர் பாதிப்பு ஏற்படும். அதிக மழை பெய்தாலும் மழைநீர் தேங்கி பயிர் பாதிப்பு ஏற்படும்.இதனைத் தவிர்க்க மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை மானாவாரி நிலத்தில் உருவாக்கலாம்.
கசிவு நீர்க்குட்டைகள் 
அதன்படி விளைநிலத்தில் சரிவான இடத்தில் பண்ணைக் குட்டைகள் மற்றும் கசிவு நீர்க்குட்டைகள் அமைக்கலாம்.மேலும் கோடைகாலத்தில் பெய்யும் மழையைக் கொண்டு கோடை உழவு செய்ய வேண்டும்.இதனால் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிப்பதுடன் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் புழுக்கள், கூட்டுப்புழுக்கள், களைகள் போன்றவை அழிக்கப்படுகிறது.
மேலும் விதைப்பதற்கு முன் நிலத்தை நன்கு உழுது ஆழச்சால் அகலப் பாத்திகள், குழிப்படுகைகள், தடுப்பு வரப்புகள் அமைத்து விதைப்பதால் மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது.அத்துடன் மண்ணிலுள்ள ஈரப்பதம் குறைவதைத் தடுக்க காய்ந்த இலைச் சருகுகள், தென்னை நார்க் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மூடாக்கு அமைக்கலாம். தென்னை நார்க்கழிவுகள் தனது எடையைப் போல 5 மடங்கு தண்ணீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டதால் உரிய நேரத்தில் மழைப் பொழிவு இல்லாவிட்டாலும் பயிர் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
ஒருங்கிணைந்த பண்ணையம்
மானாவாரிப் பயிர்களில் ரசாயனம், இயற்கை மற்றும் நுண்ணுயிர் உரங்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த உர நிர்வாகம் செய்வதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க முடியும். அத்துடன் மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடி செய்வதை விட ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் விளைச்சலும் வருமானமும் பெற முடியும்.மானாவாரி தானியப் பயிர்களில் பயறு வகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது தழைச்சத்தின் தேவை கணிசமாகக் குறைக்கப்படுகிறது.
மேலும் மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மண் வளத்தைப் பாதுகாப்பதுடன் தரமான சத்துப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அதிகப்படியான உணவு உற்பத்தி மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இன்றைய நிலையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் சிறு தானியங்கள் சாகுபடியைக் கை விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் புளி, நெல்லி, சீத்தா, இலந்தை, விளா, நாவல், கொடுக்காப்புளி போன்ற பழ வகைப் பயிர்களை சாகுபடி செய்யலாம்.இதுபோன்ற மரவகைப் பயிர்களை வளம் குறைந்த, நீர் வளம் குறைந்த நிலங்களிலும் மானாவாரியாகப் பயிரிட முடியும்.
இவ்வாறு வேளாண்மைத்துறையினர் கூறினர்.

Next Story