சிதம்பரம் அருகே பரபரப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மீது தாக்குதல் வட்டார மருத்துவ அலுவலர் உள்பட 3 பேர் கைது
சிதம்பரம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த டாக்டரை தாக்கிய வட்டார மருத்துவ அலுவலர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது வாண்டையார் இருப்பு கிராமம். இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் விக்கிரமன் (வயது 31) என்பவர் கடந்த 1½ வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன் என்பவர், விக்கிரமனை சிதம்பரத்தில் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொடர்பான பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, டாக்டர் விக்கிரமன் அங்கு சென்று சில நாட்கள் பணிபுரிந்தார்.
டாக்டர் மீது தாக்குதல்
இந்த நிலையில், டாக்டர் விக்ரமன் தனது துறையை சேர்ந்த மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீண்டும் வாண்டையார் இருப்பு கிராமத்திற்கு வந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பணியை தொடங்கினார்.
நேற்று வழக்கம் போல், பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன், டாக்டர் விக்கிரமனிடம், நான் கொடுத்த பணியை ஏன் செய்யவில்லை, என்னை மதிக்காமல் மேல் அதிகாரியிடம் பேசிவிட்டு இங்கு எப்படி வந்து பணி செய்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன் மற்றும் அரசு ஜீப் டிரைவர் பாலமுருகன், தினக்கூலி அடிப்படையில் சுகாதார பணியாளராக பணிபுரிந்து வரும் சிவா ஆகிய 3 பேரும் சேர்ந்து டாக்டர் விக்கிரமனை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளார்.
3 பேர் கைது
இதுகுறித்து விக்கிரமன் குமராட்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன், பாலமுருகன், சிவா ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் நானும், எனது வாகன டிரைவர் பாலமுருகன் ஆகியோர் வாண்டையார் இருப்பு கிராமத்துக்கு ஆய்வு பணிக்கு சென்றேன்.
அப்போது டாக்டர் விக்கிரமன் எங்களை தாக்கினார் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் டாக்டர் விக்கிரமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story