திருச்செந்தூர், கழுகுமலை பகுதியில் ரூ.14 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது


திருச்செந்தூர், கழுகுமலை பகுதியில் ரூ.14 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2021 5:48 PM GMT (Updated: 4 Jun 2021 5:48 PM GMT)

திருச்செந்தூர், கழுகுமலை பகுதியில் ரூ.14 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

திருச்செந்தூர், ஜூன்:
திருச்செந்தூர், கழுகுமலை பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

வாகன சோதனை

திருச்செந்தூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையிலான போலீசார் பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை பஸ்நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உணவு பொருட்கள் கொண்டு செல்வதாக கூறப்பட்ட வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த முதலூர் கடாச்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வேதமுத்து (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல்

அவரிடம் நடத்திய விசாரணையில் நெல்லையை சேர்ந்த முருகன் என்பவரிடம் மொத்தமாக வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். மொத்தம் 451 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுதொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நெல்லையை சேர்ந்த முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கழுகுமலை

கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது தெற்கு கழுகுமலை காளியம்மன் கோவில் அருகில் தார்ப்பாய் மூடிய நிலையில் நின்றுகொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தனர். அதில் 36 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 30 ஆயிரமாகும்.
மினி லாரி அருகில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், டிரைவர் சேலம் மாவட்டம் மாமரத்துறையை சேர்ந்த முருகன் மகன் சீனிவாசன் (36), கிளீனரான தர்மபுரி மாவட்டம் மூலக்காடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் மாது (37) ஆகியோர் என்பதும், கழுகுமலையில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்க கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், மாது ஆகிய இருவரையும் கைது செய்தனர். மினி லாரி மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்.

Next Story