செடியிலேயே முதிர்ந்து வீணாகும் பச்சை தேயிலை


செடியிலேயே முதிர்ந்து வீணாகும் பச்சை தேயிலை
x
தினத்தந்தி 4 Jun 2021 11:18 PM IST (Updated: 4 Jun 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூரில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், செடியிலேயே பச்சை தேயிலை முதிர்ந்து வீணாகிறது. அதனை வினியோகம் செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர், பந்தலூரில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், செடியிலேயே பச்சை தேயிலை முதிர்ந்து வீணாகிறது. அதனை வினியோகம் செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தொழிற்சாலைகள் மூடல்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதுவரை 17 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர். இந்த நிலையில் மாவட்டத்தில் சராசரியாக தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

இதை கருத்தில் கொண்டு கூடலூர் பகுதியில் உள்ள பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு, கொளப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு டேன்டீ நிர்வாகம் காலவரையின்றி விடுமுறை அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து டேன்டீ தொழிற்சாலைகளும் மூடப்பட்டது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதையடுத்து கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பலர் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வருவது தெரியவந்தது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தனியார் தேயிலை தொழிற்சாலைகளையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தொடர்ந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிறு, குறு விவசாயிகள் தங்களின் தோட்டத்தில் பச்சை தேயிலையை பறிக்க முடியாமல் உள்ளனர். இதனால் செடியிலேயே பச்சை தேயிலை நன்கு வளர்ந்து முதிர்ச்சி அடைந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வருமானம் இல்லை

இதுகுறித்து கூடலூர், பந்தலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:- கொரோனா பரவலை காரணம் காட்டி தொழிற்சாலைகளை மூடியதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில மாதங்களாக வறட்சியால் பச்சை தேயிலை மகசூல் மிகவும் குறைவாக இருந்தது. 

இதனால் வருவாயும் கிடைக்கவில்லை. தற்போது கூடலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில் ஆண்டுதோறும் பச்சை தேயிலை மகசூல் அதிகமாக இருக்கும். மேலும் விவசாயிகளுக்கு வருவாயும் திருப்திகரமாக இருக்கும். 

தற்போது தொழிற்சாலைகளை மூடி உள்ளதால் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தொழிற்சாலைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story