தடுப்பூசி போட தொடர்ந்து பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்


தடுப்பூசி போட தொடர்ந்து பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்
x
தினத்தந்தி 4 Jun 2021 11:26 PM IST (Updated: 4 Jun 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தடுப்பூசி போட தொடர்ந்து பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

திருப்பூர்
திருப்பூரில் தடுப்பூசி போட தொடர்ந்து பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்தது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தடுப்பூசி பல்வேறு பிரிவுகளாக போடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்தது.
அந்த காலகட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தடுப்பூசி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வர வர பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
அலைமோதும் கூட்டம்
இதன் காரணமாக தடுப்பூசி வருகிற தகவல் அறிந்ததும் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குவிந்து வருகிறார்கள். இதனால் கூட்டமும் அலைமோதி வருகிறது. பல பகுதிகளில் பொதுமக்களை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்புடனும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாநகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கல்லம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என சில இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களும் தடுப்பூசி போட தொடர்ந்து குவிந்து வருகிறார்கள். இதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நஞ்சப்பா பள்ளியிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது அந்த பகுதியில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக பள்ளி முன்பு கேட்டில் தடுப்பூசி செலுத்தப்படாது என விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
சேவூர்
 சேவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை 6 மணி முதலே 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் நேற்று 18 வயது முதல் 44 வயது வரையிலும், 45 வயதுக்கு மேற்பட்டோர் என 2 வகையான தடுப்பூசி 150 பேருக்கு மட்டும் வந்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்து 150 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களை நாளை (இன்று) வருமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எந்த வயதினருக்கு எவ்வளவு தடுப்பூசி இருப்பு உள்ளது என்ற தகவலை அறிவிப்பாக ஒட்டப்படவேண்டும் என்றனர். 300க்கும் மேற்பட்டவர்கள் காலை முதலே வரிசையில் நின்றிருந்த நிலையில் 150 பேருக்கு மட்டும் தடுப்பூசி வந்ததால் மீதமுள்ளவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story