கூடுதலாக தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


கூடுதலாக தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jun 2021 11:39 PM IST (Updated: 4 Jun 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

ஒரே இடத்தில் பொதுமக்கள் குவிவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கூடுதலாக கொரோனா தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொள்ளாச்சி

ஒரே இடத்தில் பொதுமக்கள் குவிவதால்  தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கூடுதலாக கொரோனா தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டோக்கன் வழங்கப்பட்டது 

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொள்ளாச்சி பகுதியில் 18 வயது முதல் 44 வயது வரை, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவுகளாக தடுப்பூசி போடப்படுகிறது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் கடந்த 29-ந் தேதி தடுப்பூசி போடப்பட்டது. அப்போது மருந்து பற்றாக்குறை காரணமாக வரிசையில் காத்திருந்த நபர்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து 484 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு,  தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டோக்கன் கொண்டு வந்த நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது.

1,500 பேருக்கு தடுப்பூசி 

இதற்கிடையில் வடுகபாளையம் நகராட்சி பள்ளியில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இங்கு ஆண்கள், பெண்கள் தனி, தனி வரிசையில் காலை 7 மணியில் இருந்து காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

 அங்கு அவர்கள் கூட்டமாக நின்றதால், சமூக இடை வெளியை கடைப்பிடிக்க அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

பொள்ளாச்சி நகரில் ஒரே நாளில் வடுகபாளையத்தில் 500 பேருக்கும், நாச்சிமுத்து பிரசவ விடுதியில் 1000 பேர் என மொத்தம் 1,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கூடுதல் மையங்கள்

பொள்ளாச்சியில் சிறப்பு முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு நகர பகுதி மட்டுமல்லாது கிராமங்களிலும் இருந்தும் வருகிறார். 

இதனால் ஒரே இடத்தில் கூட்டம் அதிகமாக குவிவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி போடும் போது, தலா 5 வார்டுகளாக பிரித்து கூடுதல் மையங்கள் அமைத்து போட வேண்டும். 

மேலும் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருவதை தடுக்க அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story