27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு


27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு
x
தினத்தந்தி 4 Jun 2021 11:42 PM IST (Updated: 4 Jun 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த 27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் தனித்தனியாக பிரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த 27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் தனித்தனியாக பிரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
27 ஆயிரம் மனுக்கள்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அந்த மக்களுக்கு தான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாவட்டம் வாரியாக பெற்ற மனுக்களை தீர்வு காண தனியாக அதிகாரியை நியமித்து மனுக்களை அந்தந்த மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 27 ஆயிரம் மனுக்களை பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து இருந்தனர். அந்த 27 ஆயிரம் மனுக்களும் சென்னையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த மனுக்களை திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வாரியாக பிரித்து எடுக்கும் பணி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தொடங்கியது.
வீட்டுமனை பட்டா
வருவாய்த்துறை அதிகாரிகள் தாலுகா வாரியாக மனுக்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகராட்சி நிர்வாகம், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என ஒவ்வொரு துறை வாரியாக ஊழியர்கள் வந்து மனுக்களை பிரித்து அதன் பிறகு சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மனுவில்  மனுதாரரின் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் சேகரித்து தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மனுக்களை விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story