நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை வெட்டி அகற்ற வருவாய்த்துறை அனுமதி


நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை வெட்டி அகற்ற வருவாய்த்துறை அனுமதி
x
தினத்தந்தி 4 Jun 2021 11:55 PM IST (Updated: 4 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை வெட்டி அகற்ற வருவாய்த்துறை அனுமதி வழங்கி உள்ளது.

கூடலூர்,

கூடலூரில் பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை வெட்டி அகற்ற வருவாய்த்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இடவசதி இல்லை

தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இதனால் கொரோனா பரவலுக்கு முன்பு வரை அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பஸ்களும் அதிகளவு இயக்கப்பட்டது. 

ஆனால் பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடலூர் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் சாலையோரம் பஸ்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 

மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களை சாலையில் நிறுத்தி திருப்புவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

விரிவாக்க பணி

இதைத்தொடர்ந்து மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சமும், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.50 லட்சமும் ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் போதிய நிதி ஒதுக்காததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. 

பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கூடலூர் பஸ் நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தின் உள்ளே வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தின் பின்புறம் போக்குவரத்து பணிமனை செயல்படும் வகையில் கட்டமைப்பு மாற்றப்பட்டு வருகிறது.

பழமை வாய்ந்த மரங்கள்

இந்த நிலையில் பஸ் நிலையத்தின் முன்புறம் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் நிற்கிறது. ஆனால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு அந்த மரங்கள் இடையூறாக உள்ளது. இதனால் பழமை வாய்ந்த அந்த மரங்களை வெட்டுவதற்கு வருவாய்த்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மரங்களை வெட்டி அகற்றுவதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு முடிவடைந்த பின்னர் பஸ் நிலையம் அருகே நிற்கும் மரங்களை வெட்டும் பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story