வீடு திரும்பும் நோயாளிகளுக்காக 15 மினி பஸ்கள் இயக்கம்


வீடு திரும்பும் நோயாளிகளுக்காக 15 மினி பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 4 Jun 2021 11:58 PM IST (Updated: 4 Jun 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்காக 15 மினி பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்து உள்ளது.

ஊட்டி,

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்காக 15 மினி பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்து உள்ளது.

சிகிச்சை மையங்கள் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 600-ஐ நெருங்கி வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,200-ஐ கடந்து உள்ளது. கொரோனா உறுதியாகி ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

மற்றவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதுடன், கொரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்படுகின்றனர். பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 12 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு அரசு தெரிவித்த வழிமுறைகளின் படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் நோய் எதிர்ப்பு சக்திக்காக வழங்கப்படுகிறது. 

மினி பஸ்கள் ஏற்பாடு

தொற்று அறிகுறி தென்பட்டு தாமாக முன் வருகிறவர்கள் விரைவில் குணமடைந்து திரும்புகின்றனர். இதனால் நீலகிரியில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கொரோனா சிகிச்சை மையங்களில் இருந்து குணமடைபவர்களை, அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்று விட 108 ஆம்புலன்ஸ்கள், தனியார் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. 

இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே செல்ல முடியும். மலைப்பிரதேசம் என்பதால் தீவிர பாதிப்பில் இருப்பவர்களை உடனுக்குடன் அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் அவசியம். இதை கருத்தில் கொண்டு குணமடைந்து செல்பவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல தனியார் மினி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முழு பாதுகாப்பு கவச உடை

அதன்படி ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர் என மாவட்டம் முழுவதும் 15 தனியார் மினி பஸ்கள் தினமும் சிகிச்சை மையங்களுக்கு சென்று பூரண குணமடைந்து வீடு திரும்புபவர்களை அழைத்து செல்கிறது. கிராமப்புறங்களில் எதுவரைக்கும் மினிபஸ் செல்ல முடியுமோ, அதுவரை கொண்டு விடப்படுகிறது. 

அந்தந்த பகுதிகளில் தனியாக மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் நோயாளிகள் குணமடைந்து வீடு செல்ல தனியார் மினி பஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. பயண கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. பஸ் டிரைவர் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து இயக்குகிறார். 

அதே போல் ஒரு முறை சென்று திரும்பிய பின்னர் கிருமிநாசினி தெளித்து பஸ் சுத்தம் செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story