நாடு முழுவதும் தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி; கலெக்டர் அலுவலகத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் மனு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், மாவட்ட தலைவர் கே.சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய மனுவை வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் இதுவரை இல்லாத பேரழிவையும், அளவிட முடியாத வலியையும் ஒவ்வொரு குடும்பத்திலும் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனாவை எதிர்த்து போராடும் கடமையைச் செய்ய மத்திய பா.ஜனதா அரசு தவறவிட்டது கவலையளிக்கிறது. கொரோனாவை எதிர்த்து போராடி மக்களை காப்பாற்றாமல் மத்திய அரசு கைவிட்டு விட்டது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு. ஆனால் மத்திய அரசின் தடுப்பூசி போடும் வியூகம் ஆபத்தானதாகவும், தவறானதாகவும் இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கான கடமையை செய்ய அரசு தவறிவிட்டது. தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதையே அரசு முற்றிலும் மறந்து விட்டது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில் கடந்த மே மாதம் 31-ந்தேதி வரையிலும் 21 கோடியே 31 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 45 லட்சம் பேருக்கு மட்டுமே இருதவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இது இந்திய மக்கள் தொகையில் 3.17 சதவீதம் மட்டுமே.
கடந்த 134 நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால், வயதானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு 3 ஆண்டுகள் ஆகிவிடும். 18 வயதுக்கு மேற்பட்ட இளம் தலைமுறையினருக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்கு முன்பு தடுப்பூசி போட வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது மக்களை காப்பாற்ற இது ஒன்றே வழி. தற்போது தினமும் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது போல் இல்லாமல், தினமும் குறைந்தது 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே இதற்கு தீர்வு. எனவே தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசியை இலவசமாக போட மத்திய அரசுக்கு உத்தரவிட கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story