சேலத்தில் தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 200 பேருக்கு கொரோனா பரிசோதனை
சேலத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சேலம்:
சேலத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நிறைய வாகன ஓட்டிகள் சாலைகளில் சென்று வருவதை காணமுடிகிறது. இதனால் சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிவோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
வாகன தணிக்கையின்போது அபராதம் விதிக்கப்படுவதோடு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.இதனிடையே, சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க போலீஸ் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையினர் இணைந்து விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். இதுதவிர தொற்றை முழுவதும் தடுக்க வாகன தணிக்கை செய்து வாகனங்கள் வருவதை தடுக்க போலீசார் நூதன நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை
சேலத்தில் கடந்த 2 நாட்களாக மாநகராட்சி பகுதியில் முக்கியமான சாலை சந்திப்புகளில் உதவி கமிஷனர்கள் தலைமையில் வாகன தணிக்கை நடந்தது. இந்த தணிக்கை காரணத்தால் கடந்த 3 நாட்களில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இரு சக்கர வாகனங்களில் பலர் ஊர் சுற்றி வருவது போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து வாகனங்களில் வருவோரை பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் சென்று வந்ததால் அங்கு சுகாதாரத்துறையினர் வரவழைக்கப்பட்டு 2 சக்கர வாகனங்களில் சென்றவர்களை பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் பீதி அடைந்தனர்.
உரிய ஆவணங்கள்
இதன்படி நேற்று காலை முதல் பிற்பகல் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சேலம் டவுன் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் மக்கள் சுற்றி வருவது தற்போது பெரிதும் குறைந்துவிட்டது. சேலம் மாநகரில் அனைத்து பகுதிகளிதும் வாகன தணிக்கை தீவிரமாக மேற்கொண்டு உரிய ஆவணங்கள் இன்றி வருவரை பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாநகரில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இதுபோன்ற தேவையின்றி வெளியே ஊர் சுற்றும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்போது தான் சேலம் மாநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
Related Tags :
Next Story