அனைத்துவகை கடைகளையும் திறக்க வலியுறுத்துவோம். விக்கிரமராஜா பேட்டி
தமிழகத்தில் அனைத்துவகை கடைகளையும் திறக்க வலியுறுத்துவோம் என வேலூரில் வணிகர் பேரமைப்புகளின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
வேலூர்
கொரோனா தடுப்பூசி முகாம்
வேலூர், சைதாப்பேட்டை ஜெயராம்செட்டி தெருவில் ஜெயின் சங்கம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று 10-வது நாளாக முகாம் நடந்தது.
சிறப்பு விருந்தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சத்துக்கு 20 ஆயிரம் மதிப்புடைய 2 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துணை நிற்க வேண்டும்
தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி (நாளை) முதல் கடைகளை திறக்க முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். அனைத்து வகை கடைகளும் திறக்கப்படவில்லை என்ற ஆதங்கம் வணிகர்கள் மனதில் உள்ளதை நான் அறிவேன். எனவே அனைத்து வகை கடைகளையும் திறக்க முதல்-அமைச்சரிடம் முறையிட்டு கடைகள் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து அரசிடம் இது தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம். கொரோனா பரவலை தடுக்க வியாபாரிகளும், பொதுமக்களும் இணைந்து அரசுக்கு துணை நிற்க வேண்டும்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
தேவையில்லாமல் கடைகளை ‘சீல்’ வைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் முறையிட்டுள்ளோம். தவறு செய்யாத பட்சத்தில் கடைகள் மீது அதிகாரிகள் அத்துமீறி ‘சீல்’ வைத்தால் வணிகர் சங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
வியாபாரிகளுக்கு நஷ்டஈடு கேட்டு முறையிட்டுள்ளோம். தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவற்றை எழுத்துப்பூர்வமாக பெற சங்கம் முயற்சி செய்யும். அரசு அமைப்புகளுக்கு சொந்தமாக வணிக வளாக கடைகளில் 6 மாத வாடகை தள்ளுபடி உள்பட பல்வேறு சலுகைகள் அரசிடம் கேட்பது தொடர்பாக சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
ரூ.1 கோடி இலக்கு
வியாபாரிகளுக்கு அரசு சலுகைகள் செய்து கொடுக்கும் என்று நம்புகிறோம். கடன் தவணை செலுத்த கால அவகாசம் கேட்டு மத்திய நிதி மந்திரிக்கு மனு அளித்துள்ளோம். அமைச்சரிடமும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தும் வகையிலும், கொரோனா பரவலை தடுக்கும் விதத்திலும் கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி செலுத்தியவர்கள் தான் உள்ளே செல்ல முடியும் என்று நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பிற மார்க்கெட்டுக்கு இந்த நடைமுறை கொண்டு வர முடியவில்லை.
தேவைக்கேற்ப தடுப்பூசிகள் வரப்பெற்ற பின்னர், வரும் நாட்களில் அனைத்து மார்க்கெட்டுகளுக்கும் இந்த நடைமுறை கொண்டு வரப்படும். வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story