நாகை மாவட்டத்தில் 15 இடங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாய சங்கத்தினர் போராட்டம்
நாகை மாவட்டத்தில் விவசாய சங்கம் சார்பில் 15 இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மேலும் வாய்ேமடு அருகே வயலில் இறங்கி மாடுகளிடம் மனு கொடுத்தனர்.
வாய்மேடு:
நாகை மாவட்டத்தில் விவசாய சங்கம் சார்பில் 15 இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மேலும் வாய்ேமடு அருகே வயலில் இறங்கி மாடுகளிடம் மனு கொடுத்தனர்.
மாடுகளிடம் மனு
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வயலில் இறங்கி மாடுகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் துரைராசு, சோழ பாண்டி, மணிகண்டன், திவாகர் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தகட்டூர்
இதேபோல தகட்டூர் கடைத்தெருவில் தபால் நிலையத்திற்கு எதிரே வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
நகல் எரிப்பு போராட்டம்
திருப்பூண்டியில் விவசாய சங்கங்களின் சார்பில் 3 வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணி பொருளாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் முஸ்தபா மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதேபோல் கொளப்பாட்டில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்திற்கு தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் தனபால் தலைமை தாங்கினார்.இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி துணைத்தலைவர் செல்லையன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருமருகல்
திருமருகல் பஸ் நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் வேளாண் சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சி.ஐ.டி.யு.சி. ஒன்றிய செயலாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் நடுக்கடை, போலகம், திருப்புகலூர், வடகரை உள்ளிட்ட இடங்களில் விவசாய சங்கம் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் தபால் நிலையம் முன்பு வேளாண், சட்ட நகல் எரிப்பு போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நடந்தது. போராட்டத்திற்கு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் பாண்டியன். ஒன்றிய செயலாளர் முத்தையன், மாவட்ட விவசாய சங்க தலைவர் அம்பிகாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அபுபக்கர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வலிவலம்
வலிவலம் தபால் அலுவலகம் முன்பு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்தையன் தலைமையிலும், சிக்கல் தபால் அலுவலகம் முன்பு நாகை விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையிலும் , தேமங்கலத்தில் விவசாய சங்க மாநில குழு உறுப்பினரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான சரபோஜி தலைமையிலும் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் 15 இடங்களில் விவசாய சங்கம் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story