மேட்டூர் அணை திறப்பதற்குள் கருங்கன்னியில் சேதமடைந்துள்ள தடுப்பணை சீரமைக்கப்படுமா?


மேட்டூர் அணை திறப்பதற்குள் கருங்கன்னியில் சேதமடைந்துள்ள தடுப்பணை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 5 Jun 2021 8:25 PM IST (Updated: 5 Jun 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை திறப்பதற்குள் கருங்கன்னியில் சேதமடைந்துள்ள தடுப்பணை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வேளாங்கண்ணி:
மேட்டூர் அணை திறப்பதற்குள் கருங்கன்னியில் சேதமடைந்துள்ள தடுப்பணை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சந்திரநதி ஆறு

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதியில் திருக்குவளை அருகே வெள்ளைஆற்றில் இருந்து ஏற்வைகாடு என்ற இடத்தில் இருந்து பிரிந்து சந்திரநதி ஆறு செல்கிறது. இந்த ஆறு ஏற்வைகாடு, மேல வாழக்கரை, வாழக்கரை, மடப்புரம், மீனம்பநல்லூர், பிரதாபராமபுரம், திருப்பூண்டி, காரப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன வாய்க்காலாகவும், வடிகாலாகவும் உள்ளது.
இந்த ஆறு வேதாரண்யம் கால்வாயில் கலந்து கடலில் கலக்கிறது.இந்த பகுதி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக உள்ளது.இந்த ஆறு மூலம் இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன..

குறுவை சாகுபடி

மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி(சனிக்கிழமை) தண்ணீர் திறக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு முழுமையாக சென்று சேரும் வகையில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளான கீழையூர் ஒன்றிய பகுதிகளில்  23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் மட்டும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்காக வயல்களை எந்திரம் மூலம் கோடை உழவு செய்து செப்பனிட்டு வருகின்றனர்.

சேதமடைந்த தடுப்பணை

இந்த நிலையில் சந்திரநதியில் கருங்கண்ணி என்ற இடத்தில் திருகு தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இரும்பிலான தண்ணீர் தேக்கும் பலகைகள் சேதமடைந்துள்ளது. இதனால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத அளவிற்கு உள்ளது. 
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஏர்வைகாட்டில் வெள்ளையாற்றில் இருந்து பிரிந்து சந்திரநதி வழியாக வரும் தண்ணீரை இந்த தடுப்பணையில் அடைத்தால் தான் மீனம்பநல்லூர், மடப்புரம், கருங்கன்னி உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். தடுப்பணை சேதம் அடைந்துள்ளதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வெளியேறிவிடும் நிலை உள்ளது.
எனவே மேட்டூர் அணை திறப்பதற்குள் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story