கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு தவறி விட்டது காங்கிரஸ் குற்றச்சாட்டு
கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற தினமும் குறைந்தது ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடவேண்டும் என்று ஜனாதிபதிக்கு புதுவை காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
புதுச்சேரி,
காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானாவில் இருப்பதால் அவர்கள் கவர்னருடன் காணொலிக்காட்சி மூலமாக பேசினர். அதனை தொடர்ந்து அவர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்காக ஒரு கடிதத்தை கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் அளித்தனர். அந்த கடித்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோயானது இந்தியா இதுவரையில் காணாத பேரழிவையும், ஒவ்வொரு குடும்பத்திலும் அளவிட முடியாத வலியையும் ஏற்படுத்தியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, மத்திய அரசானது கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய, தனது கடமையை முற்றிலுமாக கைவிட்டு விட்டது. மக்களை நிர்கதியில் தள்ளி, அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும்படி விட்டுவிட்டது. தனது தவறான மேலாண்மையினால் கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறிய குற்றத்திற்கு ஆளாகியுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.
கொரோனா நோய்க்கு தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு ஆகும். மத்திய அரசு கூறியுள்ளபடி, கடந்த மே 31-ந் தேதி வரை 21.31 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 4.45 கோடி பேர் மட்டுமே. இது இந்திய மக்கள் தொகையில் 3.17 சதவீதம் ஆகும்.
தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 16 லட்சம் தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. இதே வேகத்தில் போடப்பட்டால், நம் நாட்டிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மூன்று ஆண்டுகள் ஆகும்.
எனவே வரப்போகும் கொரோனா 3-வது அலையில் இருந்து நம் சக குடிமக்களை மத்திய அரசு எப்படி காப்பாற்றப் போகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றால் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். இந்த ஒரே வழி மட்டும் தான் ஒவ்வொரு இந்தியரையும் கொரோனாவை வெல்ல வைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story