புதுச்சேரியில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருகிறது நாராயணசாமி வேதனை
புதுச்சேரியில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருவதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. தடுப்பூசி போடுவதிலும் மத்திய அரசு பல்வேறு குளறுபடியை ஏற்படுத்தி வருகிறது. நமது நாட்டிலுள்ள மக்களுக்கு தடுப்பூசி போடாமல், இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
இந்தியாவில் இதுவரை 21 கோடி பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அனைவருக்கும் தடுப்பூசி போட இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். எனவே எங்கள் கட்சி தலைமையின் வேண்டுகோளின்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு மனு அனுப்பி உள்ளோம்.
கொரோனா 3-வது அலை வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளை தாக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே குழந்தைகளை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை நாம் இப்போதே உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதுவையில் 13 லட்சம் மக்களுக்கும் உடனடியாக தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக நான் பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்.
ஊரடங்கு காரணமாக புதுவை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அவர் அறிவித்து 15 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் மக்களுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை.
தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் முழுமையான அமைச்சரவை அமைக்க முடியவில்லை. அது குறித்து நான் விமர்சிக்க விரும்பவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி ஏற்க முடியாத பரிதாப நிலை வேதனையை தருகிறது. தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளனர். இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story