ரங்கசாமியுடன் மேலிட பொறுப்பாளர் சந்திப்பு நியமன எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் பதவிதர பா.ஜ.க.வில் எதிர்ப்பு
சபாநாயகர் பதவியை நியமன எம்.எல்.ஏ.வுக்கு தர பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேலிட பார்வையாளர் ராஜீவ் சந்திரசேகர், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் அப்போது அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.
இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள், பா.ஜ.க.வுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் என உடன்பாடு செய்யப்பட்டது.
இதனால் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த அமைச்சரவை விவகாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பா.ஜ.க. அமைச்சர்கள், சபாநாயகருக்கான பட்டியலை மேலிட பொறுப்பாளர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வழங்குவார்கள் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில் நேற்று பிற் பகல் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது.
அப்போது அமைச்சரவை விரிவாக்கம், இலாகாக்கள் ஒதுக்கீடு, சபாநாயகர், வாரியத் தலைவர் பதவி இடங்கள் தொடர்பாக அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர்கள் நியமனம் தொடர்பான பட்டியலை அவர் வழங்கவில்லை என்று தெரிகிறது.
இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த ராஜீவ் சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அமைச்சரவை விரிவாக்கம், சபாநாயகர் பதவி தொடர்பாக பல்வேறு கேள்விக் கணைகளை தொடுத்தனர். ஆனால் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று வெறுமனே கூறிவிட்டு அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டுச் சென்றார்.
அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிக்கான பெயர்களை இறுதி செய்வதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே ஒத்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சபாநாயகர் பதவிக்கு நியமன எம்.எல்.ஏ. ஒருவரின் பெயரை பா.ஜ.க. மேலிடம் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டது.
அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பெரும்பா லானோர் நியமன எம்.எல்.ஏ.வை, சபாநாயகராக நியமிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இருக்கும்போது, உயர் பதவியில் நியமன எம்.எல்.ஏ.வை அமர வைப்பதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது அங்கு கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் அமைச்சர் பதவிகளுக்கான நியமனம் தொடர்பாகவும் அவர்களுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டது. இதனால் பா.ஜனதா கட்சிக்குள் அமைச்சரவை இறுதிப்பட்டியலை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story