கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொட்டித்தீர்த்த கனமழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதேபோல் தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கால்வாய், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் நேற்று தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானல் மலைப்பகுதியில் விட்டுவிட்டு பெய்த மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தண்ணீர் சீராக விழுந்தது. இதேபோல் உத்தமபாளையம் அருகே உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவி பகுதியில் இருந்த பாறைகள், தடுப்பு கம்பிகள் தெரியாத வகையில் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுந்தது.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே பாசன கண்மாய்களுக்கு போய் சேருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தேனி மாவட்டத்தில் சுருளி அருவி மற்றும் கும்பக்கரை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள். ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கொரோனா வைரசின் 2-வது அலையால் இந்த ஆண்டும் சுருளி அருவி மற்றும் கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story