4 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்த ரெயில்வே ஊழியர். 5 பேர் மீது வழக்கு


4 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்த ரெயில்வே ஊழியர். 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Jun 2021 9:44 PM IST (Updated: 5 Jun 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

சொத்து வழக்கு நடத்த பணம் கொடுக்காததால் 4 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்த ரெயில்வே ஊழியர்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜோலார்பேட்டை-

புகார் மனு

ஏலகிரிமலையில் உள்ள முத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிங்காரத்தின் மகன் பிரபு (வயது 30), பெருமாளின் மகன் திருப்பதி (38), பப்புன் ராமசாமியின் மகன் அண்ணாமலை (43), மற்றொரு சிங்காரத்தின் மகன் சுதாகர் (37). 

மேற்கண்ட அனைவரும் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஏலகிரிமலை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அதில் பிரபு என்பவர் ஒரு புகார் மனுவை கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

மிரட்டல்

நாங்கள் மேற்கண்ட கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். நாங்கள் வசிக்கும் முத்தானூர் கிராமத்தில் 30 வீடுகள் உள்ளன. எங்கள் கிராமத்தில் ெரயில்வே துறையில் வேலை பார்க்கும் ஊழியர் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். 

மனோகரன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு என்னையும் (பிரபு), திருப்பதி, அண்ணாமலை, சுதாகர் ஆகிய 4 பேர் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்தார்.  எங்களை ஊருக்குள் வரக்கூடாது. குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது. ஊரில் உள்ள கடையில் நாங்கள் மளிகை, அரிசி, பருப்பு வாங்க கூட தடை விதித்தார். அவரும், ஆதரவாளர்களும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். 

வழக்கு செலவுக்கு பணம் கொடு

எங்கள் கிராமத்தில் வெளி நபர்களுக்கு சொந்தமான 250 வீட்டு மனைகளும், நிலங்களும் உள்ளன. அவற்றை ஏமாற்றி அபகரிக்க முயன்று வரும் மனோகரனும் அவரது ஆதரவாளர்களும் அந்த சொத்து வழக்குச் செலவுக்கு பணம் கொடு, என எங்களிடம் கேட்டு பொய் புகார்களில் கையெழுத்து கேட்டு எங்களை மிரட்டுகிறார்கள். 

இந்தக் குற்றச் செயலுக்கு நாங்கள் ஒத்துப்போகவில்லை என்பதற்காக எங்கள் நான்கு குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைத்திருப்பதோடு, எங்களை ஊரிலிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மனோகரன் மற்றும் அவரின் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

5 பேர் மீது வழக்குப்பதிவு

ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜன், மேற்கண்ட மனு மீது ெரயில்வே ஊழியர் மனோகரன் மற்றும் ரமேஷ், காளி, பிரபாகரன், ஆண்டி ஆகிய 5 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story