குப்பையில் கொட்டப்படும் ‘ஹோம்மேடு' சாக்லேட்
கொடைக்கானல் பகுதியில், சுற்றுலா பயணிகள் வராததால் ‘ஹோம்மேடு' சாக்லேட்டுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன.
கொடைக்கானல்:
ஹோம்மேடு சாக்லேட்டுகள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் என்றவுடன் குளு, குளு சீசன் மட்டுமல்ல, அங்கு தயாரிக்கப்படுகிற ேஹாம்மேடு சாக்லேட்டுகளும் நம் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்.
வீடுகள் மற்றும் சிறிய தொழிற்சாலைகளில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் அந்த சாக்லேட்டுகள் சுண்டி இழுக்கும் சுவை கொண்டதாகும். கொடைக்கானல் வருகை தரும் சுற்றுலா பயணிகள், சாக்லேட்டுகளை ஆர்வமுடன் வாங்கி செல்வர்.
இதனால் ஒவ்வொரு சீசன் காலத்திலும் கொடைக்கானலில் சாக்லேட் விற்பனை சூடு பிடிக்கும். இதனை நம்பி ஏராளமான வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளனர்.
ஆயிரம் கடைகளில் விற்பனை
கொடைக்கானலில் நிலவும் சீசன் காலத்தில் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாக்லேட் விற்பனை கடைகள் திறந்திருக்கும். ஆனால் கொரோனா என்னும் கொடிய அரக்கனால் அந்த தொழிலும் முடங்கி விட்டது.
கடந்த ஆண்டில் சீசனை எதிர்பார்த்து ஏராளமானோர் சாக்லேட் தயாரித்து விற்பனைக்காக தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் ஊரடங்கு எதிரொலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் சாக்லேட்டுகள் வீணாகி விட்டன.
இதன் காரணமாக சாக்லேட் தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.
30 நாட்கள்
ஹோம்ேமடு சாக்லேட்டுகளை பொறுத்தவரை தயாரித்ததில் இருந்து 30 நாட்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். கடந்த ஆண்டு தான், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் சாக்லேட் விற்பனை கானல் நீராகி விட்டது.
ஆனால் இந்த ஆண்டில் விற்பனை மும்முரமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டும் கொரோனாவின் கோரப்பிடியில் சாக்லேட்டுகளும் சிக்கி விட்டன.
சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, கொடைக்கானலில் பல்வேறு வீடுகள் மற்றும் சிறிய தொழிற்சாலைகளில் ஹோம்மேடு சாக்லேட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்தது.
ஆனால் அவை தற்போது விற்பனை செய்ய முடியாமல் வீணாகி கொண்டிருக்கின்றன.
வாழ்வாதாரம் பாதிப்பு
விற்பனைக்காக வைத்திருந்த சாக்லேட்டுகளை வீதிகளில் குப்பையில் கொட்ட வேண்டிய அவலநிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடு்மையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹோம்மேடு சாக்லேட் வியாபாரி சையது கூறுகையில், கொரோனா ஊரடங்கு எதிரொலியாக, கடந்த 2 ஆண்டுகளாக கொடைக்கானலில் சாக்லேட் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாக்லேட்டுகள் வீணாகி குப்பைகளில் கொட்டி வருகிறோம். இதனால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே ஹோம்மேடு சாக்லேட் வியாபாரிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் கொடைக்கானல் நகராட்சி மூலம் வசூலிக்கப்படும் கடை வாடகை கட்டணத்தை 2 ஆண்டுகள் ரத்து செய்ய வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story