திண்டிவனம் அருகே ரூ.7 லட்சத்தை வழிப்பறி செய்ததாக நாடகமாடிய லாரி டிரைவர் கைது நண்பர்களிடம் கொடுத்திருந்த பணம் மீட்பு


திண்டிவனம் அருகே  ரூ.7 லட்சத்தை வழிப்பறி செய்ததாக நாடகமாடிய லாரி டிரைவர் கைது  நண்பர்களிடம் கொடுத்திருந்த பணம் மீட்பு
x
தினத்தந்தி 5 Jun 2021 10:19 PM IST (Updated: 5 Jun 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே ரூ.7 லட்சத்தை வழிப்பறி செய்து விட்டதாக நாடகமாடிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை போலீசார் மீட்டனர்.

திண்டிவனம், 

முட்டை வியாபாரி

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டை அருகே உள்ள வெங்கம்பாக்கம் செந்தமிழ் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்ககுமார். இவருடைய மனைவி ராஜகுமாரி (வயது 53). முட்டை வியாபாரியான இவரிடம்  மேலக்கோட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் உதயக்குமார் (35) என்பவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ராஜகுமாரி, உதயகுமாரரை சந்தித்து, ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்து நாமக்கல் சென்று முட்டைகளை கொள்முதல் செய்து லாரியில் ஏற்றிவருமாறு கூறினார். பணத்தை பெற்றுக்கொண்ட உதயகுமார் அங்கிருந்து லாரியில் புறப்பட்டார். 

போலீஸ் விசாரணை

இந்த நிலையில் நேற்று அதிகாலை ராஜகுமாரியை செல்போனில் தொடர்பு கொண்ட உதயகுமார், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த  சலவாதி கிராமத்தில் லாரிகள் நிறுத்துமிடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் என்னை தாக்கி, முட்டை வாங்க வைத்திருந்த ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டதாக கூறினார். 
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த ராஜகுமாரி இதுபற்றி ரோஷணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திண்டிவனம் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவரிடம் உதயகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

நாடகமாடிய டிரைவர் 

அப்போது அவர், போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் உதயகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்படி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், உதயகுமார் கடந்த 6 மாதங்களாக வறுமையில் வாடிவருவதாகவும், எனவே முட்டை வாங்க கொடுத்த பணத்தை அபேஸ் செய்வதற்காக அந்த பணத்தை வெங்கம்பாக்கத்தை சேர்ந்த நண்பர்களான கார்த்திக், சேகர் ஆகியோரிடம் கொடுத்துள்ளதும், பின்னர் 4 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கி பணத்தை பறித்துச் சென்றதாக நாடகமாடியதும் தெரியவந்தது. 

கைது

இதையடுத்து உதயகுமாரை போலீசார் கைது செய்ததோடு, அவருடைய நண்பர்களிடம் இருந்த ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை மீட்டு முட்டை வியாபாரி ராஜகுமாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்திய போலீசாரை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் வெகுவாக பாராட்டினார். 

Next Story