ஊரடங்கால் வாழை இலைகள் தேக்கம்


ஊரடங்கால் வாழை இலைகள் தேக்கம்
x
தினத்தந்தி 5 Jun 2021 10:58 PM IST (Updated: 5 Jun 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டதாலும், சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் வாழை இலைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி

ஊரடங்கு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டதாலும், சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் வாழை இலைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாழை இலை

பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்படுகிறது. 

மேலும் தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வாழை மரங்களும் சாகுபடி செய்யப்படுகிறது. வாழை இலைகளை விவசாயிகள் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

ஏலம் எடுக்கும் வியாபாரிகள் கேரளாவிற்கும், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் உணவகங்கள் மூடப்பட்டு உள்ளன. 

மேலும் திருமணம், காதுக்குத்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை எளிமையாக நடந்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சில இடங்களில் சுப நிகழ்ச்சிகள் ரத்தும் செய்யப்படுகின்றன. இதனால் வாழை இலைகள் விற்பனை இல்லை. இதன் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயிகள் நஷ்டம்

தோட்டங்களில் இருந்து வாழை இலைகளை வெட்டி கொண்டு வந்து மார்க்கெட்டில் விற்பனை செய்வோம். ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு உள்ளது. இதற்கிடையில் உணவகங்கள் மூடப்பட்டு விட்டதாலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெறுவதால் வாழை இலை விற்பனை இல்லை. இதனால் இலையை வெட்டாமல் வாழை மரத்தில் விட்டு உள்ளோம்.

அடிக்கடி பலத்த காற்று வீசுவதால் இலைகள் மரத்திலேயே கிழிந்து சேதமாகி வருகிறது. விவசாய பணிகளுக்கு தடையில்லை என்று அரசு அறிவித்தாலும், வாழை இலை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

ஏற்கனவே விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா காரணமாக வாழை சாகுபடி செய்து உள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஏலம்

இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வாழை இலை ஏலம் நடைபெறும். ஏலத்துக்கு ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், பொள்ளாச்சி, கோவை அருகே உள்ள பேரூர், தொண்டாமுத்தூர், வெள்ளிங்கிரி மலை பகுதிகளில் இருந்து வாழை இலை கொண்டு வரப்படுகிறது. 

இதை தவிர தமிழக எல்லையொட்டி உள்ள கேரள பகுதிகளில் இருந்தும் ஏலத்துக்கு வாழை இலை கொண்டு வரப்படும். வழக்கமாக ஏலத்திற்கு 150 முதல் 200 கட்டு வாழை இலைகள் கொண்டு வரப்படும். ஒரு கட்டுக்கு 100 இலைகள் இருக்கும்.

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாழை இலை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதை தவிர திருமணம், காதுக்குத்து, விருந்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வழக்கமாக முகூர்த்த நாட்களில் ஒரு கட்டு ரூ.500 முதல் ரூ.1500 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் ரூ.300 முதல் ரூ.700 வரை விற்பனை ஆகும்.

வர்த்தகம் பாதிப்பு

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வாழை இலை விற்பனை இல்லை. ஊரடங்கு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டு உள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதனால் விவசாயிகள் வாழை இலையை விற்பனைக்கு கொண்டு வராததால் ஏலம் நடைபெறுவதில்லை.

 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் தன்னார்வலர்கள், சில உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் விற்பனை செய்வதற்கு மட்டும் தினமும் ஒரு கட்டு வாழை இலை தான் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் வாழை இலை தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.25 லட்சம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு உணவகங்கள் திறக்கப்பட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் மட்டுமே வாழை இலை விலை விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story