தொழுதூர் பகுதியில் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தல் 2 பேர் கைது
தொழுதூர்பகுதியில் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்துள்ள லெக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீஸ்காரர்கள் அன்பரசன், குமார், ராஜ்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களது காரை சோதனை செய்தனர். அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் காரை ஓட்டி வந்தது, ம.கொத்தனூரை சேர்ந்த நீலகண்டன் (வயது 32), தச்சூரை சேர்ந்த முத்துசாமி (31) என்பது தெரியவந்தது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, அதை தொழுதூர் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்ய காரில் கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 180 மில்லி அளவுள்ள 140 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story