முழு ஊரடங்கு எதிரொலி: உரிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டப்படும் குடை மிளகாய்-விவசாயிகள் வேதனை
முழு ஊரடங்கு எதிரொலியால் உரிய விலை கிடைக்காமல் குடை மிளகாய்கள் குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது.
ராயக்கோட்டை:
குடை மிளகாய்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரோஜா, தக்காளி, குடை மிளகாய், காலிபிளவர், முட்டைக்கோஸ் போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்து குடை மிளகாய்களை பயிர் செய்து வருகிறார்கள்.
மஞ்சள், பச்சை, சிவப்பு ஆகிய வண்ணங்களில் சாகுபடி செய்யப்படும் இந்த குடை மிளகாய்கள் அதிகமாக பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஊரடங்கால் விற்பனை சரிவு
ஒரு ஏக்கரில் பசுமைக்குடில்கள் அமைத்து குடை மிளகாய் சாகுபடி செய்ய ரூ.40 லட்சம் வரை விவசாயிகளுக்கு செலவாகிறது. நன்கு விளைந்த குடை மிளகாய் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை காரணமாக கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நட்சத்திர ஓட்டல்கள், துரித உணவகங்கள் மற்றும் மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன.
இதன்காரணமாக குடை மிளகாய் விற்பனை சரிவடைந்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு குடை மிளகாய்களை அனுப்ப முடியாமலும், ஏற்றுமதி செய்ய முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
குப்பையில்...
இதுகுறித்து எச்.செட்டிப்பள்ளியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடை மிளகாய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நட்சத்திர ஓட்டல்களில் குடை மிளகாய் முக்கிய உணவு பொருளாக உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் நட்சத்திர ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் குடை மிளகாய் விற்பனை சரிந்துள்ளது. மேலும், உரிய விலையும் கிடைக்காததால் குடை மிளகாய்களை பறித்து குப்பையில் கொட்டி வருகிறோம்.
சில விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும், உரத்திற்காகவும் குடை மிளகாய்களை பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் குடை மிளகாய்களை பறிக்காமல் விட்டு விடுவதால் அவை செடிகளிலேயே அழுகி வருகிறது. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story