நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை 2 வீடுகள் இடிந்தன: 3 பேர் உயிர் தப்பினர்
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதில் 2 வீடுகள் இடிந்தன. 3 பேர் உயிர் தப்பினர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதில் 2 வீடுகள் இடிந்தன. 3 பேர் உயிர் தப்பினர்.
பலத்த மழை
அக்னி நட்சத்திரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக பலத்த மழை பெய்தது. பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், எஸ்.வாழவந்தி, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்தது. குளிர்ந்த காற்று விசியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எருமப்பட்டி ஒன்றியத்தில் எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீடுகள் இடிந்தன
மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த ரஞ்சிதம் (வயது 65) என்பவர் மட்டும் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய மழையால் ரஞ்சிதம் வசித்த குடிசை வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் அதிஷ்டவசமாக ரஞ்சிதம் உயிர் தப்பினார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி முத்தாயி (65) என்பவரது ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் வீடு இடிந்து சேதம் அடைந்தது குறித்து விசாரணை நடத்தினர்.
கொல்லிமலையில் அதிக மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் கொல்லிமலையில் அதிகபட்சமாக 43 மி.மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு :-
கொல்லிமலை-43, மோகனூர்-12, மங்களபுரம்-7, திருச்செங்கோடு-3, சேந்தமங்கலம்-2, நாமக்கல்-1. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்றும் காலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
நாமகிரிபேட்டை பகுதியில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பலத்த மழை பெய்தது. அதேபோன்று மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இந்த வாரத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் மழை பெய்தது நாமகிரிபேட்டை பகுதி விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Related Tags :
Next Story